Wednesday, February 11, 2009

கி.அ. சச்சிதானந்தன்


கி.அ. சச்சிதானந்தத்தினை நேர்காணல் செய்ய முடிவு செய்ததே அவருடன் பழகிய இலக்கிய நண்பர்களின் நினைவோடைக்காகத்தான். அதற்காக அதனளவில் மட்டும் முக்கியத்துவம் பெறும் படைப்பாளியே இவர் என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. அதையும் தாண்டி தனிப்பெரும் ஆளுமை சச்சி. பலகாலம் நாடோடியைப் போல ஊர் சுற்றித் திரிந்தவர். எவரெஸ்ட் சிகரத்திற்கு பயணித்த முதல் தமிழர். தேர்ந்த தத்துவப் பிரியர். ஜே. கிருஷ்ணமூர்த்தியின்பால் ஈர்க்கப்பட்டவர். நோபல் பரிசுபெற்ற `சாமுவேல் பெக்கட்'டின் `கோடோவிற்காக காத்திருத்தல்' (நாடகம்), தாகூரின் சித்ரா (நாடகம்), ரோசா லக்சம்பெர்கின் சிறைக்கடிதங்கள், பனிமலைப் பிரதேசத்துக் கதைகள், கல்மாளிகை (மராட்டி நாடகம்) போன்றவற்றை தமிழுக்குக் கொண்டுவந்து சேர்த்தவர். சாகித்ய அகாடமிக்காக `மௌனி'யை பற்றி மோனாகிராப் எழுதியவர். கூடவே மௌனியின் மொத்த சிறுகதைகளையும் பதிப்பித்தவர்.`நடை' - இதழ் தொகுப்பு, `இலக்கிய வட்டம்'- இதழ் தொகுப்பு இவற்றின் தொகுப்பாசிரியர். இதுவரை `அம்மாவின் அத்தை' `உயிர் இயக்கம்' (தமிழினி) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.பி.ஆர். ராஜம் ஐயர் அவர்களின் ‘Rambles in Vedanta என்ற எளிய வழி ஆங்கில வேதாந்த நூலைக் கொண்டுவந்தவர். அதனால் பெரும் தொகையை இழந்தவர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இலக்கிய பரப்பில் ஜம்மென்று இயங்குபவர். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத எளியர். வயிறு புண்ணாகிப் போகும் அளவிற்கு குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் குறும்பர். தீராநதிக்காக கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் சந்தித்தோம். மாலை வரை உரையாடல் நீண்டது. பசி மயக்கத்திலும் ருசியாகப் பேசினார்சச்சி
.தீராநதி : நவீன தமிழிலக்கியப் பரப்பில் `எழுத்து' காலகட்டத்தின் பிரதிநிதிகளில் ஒருவராக நீங்கள் இன்றைக்கு அடையாளம் காணப்படுகிறீர்கள். அதைத் தொடர்ந்து சமகால இலக்கியப் போக்குகள் வரை ஒரு தொடர்ச்சியான தொடர்பை வைத்தும் இருக்கிறீர்கள். உங்களின் பின்புலத்திலிருந்து ஆரம்பிப்போமா?
கி.அ. சச்சிதானந்தம் : ஹைஸ்கூல் வரைக்கும் நான் செங்கல்பட்டில்தான் படித்தேன். என் சின்ன வயசிலேயே எங்கள் அப்பா இறந்துவிட்டார். அவர் இறந்தபிறகு குடும்பத்தில் ரொம்பக் கஷ்டம். செங்கல்பட்டில் நாங்கள் மேட்டுத் தெருவில்தான் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து நான்கு ஐந்து வீடுகள் தள்ளி ஒருவர் மளிகைக் கடை வைத்திருந்தார். அந்தக் கடைக்குப் போய் நான்தான் வீட்டிற்குத் தேவையான மளிகைச் சாமான்களை வாங்கி வருவேன். அவரிடம் கல்கி, ஆனந்த விகடன் எல்லாம் வரும். அந்தப் பழைய புஸ்தகங்களைக் கிழித்து பொட்டலம் கட்டிக் கொடுப்பார். அதை நான் படித்துக் கொண்டே இருப்பேன். என்னுடன் இருந்த பசங்கள் எல்லோரும் சினிமாவுக்குப் போவார்கள். என்னிடம் சினிமாவுக்குப் போக காசு கிடையாது. அதனால் ஓசியில் இந்த மாதிரி படிப்பது மனசுக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. அதே போல எனக்கு சின்ன வயசில் பகல் கனவு காண்பது ரொம்ப விருப்பம். மேட்டுத் தெரு பக்கத்தில் ஒரு சின்ன குன்று இருந்தது. அங்கு தனியாக உட்கார்ந்து கொண்டு ஏதாவது பகல் கனவு கண்டு கொண்டிருப்பேன். அங்கு மாடு மேய்க்கும் பசங்களோடு உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருப்பேன். காட்டு களாக்காய் பறித்துத் தின்று கொண்டே அந்த மாடு மேய்க்கும் பசங்களோடு ஊர் சுற்றித் திரிவேன். இதனால் சின்ன வயசிலேயிருந்தே தனியாகப் போக வேண்டும், தனியாக ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது.இந்தச் சமயத்தில் செங்கல்பட்டு ஆஸ்பத்திரி பக்கத்தில் ஒரு நூலகம் இருந்தது. நீங்கள் நம்பினால் நம்புங்கள். என்னுடைய 12 வயதுக்குள் வை.மு. கோதைநாயகியின் எல்லா நாவல்களையும் படித்துவிட்டேன். புரியுதோ இல்லையோ எல்லாவற்றையும் படித்தேன். அவரின் 90 புஸ்தகம் முழுக்க படித்துவிட்டேன். அதே போல அந்தக் காலத்தில் ரொம்பவும் புகழ்பெற்ற ஆரணி குப்புசாமி முதலியாரின் துப்பறியும் நாவல்கள் முழுவதையும் படித்துவிட்டேன். இந்த நேரத்தில் படித்த மேஜர் புஸ்தகம் என்றால் அது சரத்சந்தர் எழுதிய `தேவதாஸ்'தான். அதைப் படித்துவிட்டு இரண்டு நாள் `ஓ'வென்று அழுதிருக்கிறேன். இப்படி கண்ட புஸ்தகங்களை படித்தேன். அதே மாதிரி விளையாட்டிலும் எனக்கு ஈடுபாடு இருந்தது. வாலிபால் விளையாடுவேன். கிரிக்கெட் விளையாடுவேன். ஆக எனக்கு சின்ன வயசு பொழுதுபோக்கு என்றால் ஒன்று: விளையாடுவது. இரண்டு: படிப்பது. சின்ன வயசிலேயே பள்ளிக்கூட படிப்பு என்றாலே எனக்குப் பிடிக்காது. பரீட்சைக்கு நான்கு நாட்கள் முன்னால்தான் நான் படிப்பேன். அதே ஞாபகத்தில் இருக்கும். அதை வைத்தே எழுதி பாஸ் பண்ணிவிடுவேன். பரீட்சைக்காகத்தான் பாட புஸ்தகத்தை கையிலெடுப்பேனே ஒழிய மற்ற நேரங்கள் முழுக்க கதைப் புஸ்தகத்தைத்தான் படித்துக் கொண்டிருப்பேன். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு எங்கள் குடும்பம் காஞ்சிபுரத்திற்கு மாறியது. அங்கு வந்த பிறகு பச்சையப்பன் கல்லூரி இன்டர் மீடியட்டில் சேர்ந்தேன். அப்போது செட்டித் தெருவில்தான் பச்சையப்பன் கல்லூரி இருந்தது.. அதற்கு எதிரில் `திராவிட நாடு' ஆபீஸ் இருந்தது `திராவிட நாடு' ஆபீஸ் முன் திண்ணை இருக்கும். திராவிட நாட்டிற்கு வருகின்ற பத்திரிகைகளையெல்லாம் அந்தத் திண்ணையில் போட்டுவிடுவார்கள். அப்போது அண்ணா அங்கேதான் இருந்தார். மதிய உணவு இடைவேளை ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை அங்கேபோய் அங்குள்ள பத்திரிகைகளைப் படிப்பேன். இப்படி படிக்கும் காலத்தில்தான் எனக்கு தாகூர் மீது ஒரு பைத்தியம் பிடித்தது. இதோடு கல்கி, அகிலன் போன்றவர்களையும் படிக்க ஆரம்பித்தேன். கல்லூரியில் இருந்த நூலகத்திற்குச் சென்று படிப்பேன். அப்போது அங்கு பேராசிரியராக நா.சஞ்சீவி இருந்தார். அப்போது நானும் என்னுடைய அண்ணனும்தான் இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தோம். அதனால் இருவருக்கும் சேர்த்து ஒரு புஸ்தகம்தான் வாங்குவோம். ஒரு நாள் சஞ்சீவி முதல் வகுப்பு `அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்' என்ற கபிலரின் புறநாறூற்றுப் பாடலைதான் எடுத்தார். பாடம் நடத்திக் கொண்டே வரும்போது திடீரென்று யார் யாரிடம் புஸ்தகம் இல்லை என்றார். சிலர் எங்களிடம் புஸ்தகம் இல்லை என்றார்கள். உடனே அவர்களை வெளியே போ என்று சொல்லி அனுப்பிவிட்டார். என்னிடமும் புஸ்தகம் இல்லை. ஆனால் நான் சொல்லாமல் உட்கார்ந்திருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் என்னிடம் புஸ்தகம் இல்லை என்பதை சஞ்சீவி கண்டுபிடித்துவிட்டார். என்னை எழுந்திருங்கள் என்றார். எழுந்தேன். ``புஸ்தகம் இல்லாதவர்களை வெளியில் போகச் சொன்னேன். நீங்கள் ஏன் போகவில்லை'' என்றார். நான் சண்டை போட்டுக் கொண்டு வெளியில் வந்துவிட்டேன்.அருமையாக அவர் பாடம் நடத்தும்விதமே ரசிக்கும் விதமாக இருக்கும். அந்த வகுப்பறை ஒரு வீடு என்பதனால் வெளியில் வந்த நான் வகுப்பறைக்கு வெளியிலுள்ள படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டு பாடம் கவனித்துக் கொண்டிருந்தேன். வகுப்பு முடிந்து வெளியில் வந்த அவர் ``உன்னை வெளியில் போகத்தானே சொன்னேன்'' என்றார். உடனே எனக்கு கோபம் வந்துவிட்டது. இருந்தும் பேசாமல் போய்விட்டேன். இரண்டாம் நாள் ``புஸ்தகம் வாங்கி வந்தாயா'' என்று கேட்டார். நான் இல்லை என்றேன். ``ஏன் நீங்க தகராறு செய்கிறீங்க'' என்றார். உடனே நான் கோபத்தில் ``புஸ்தகம் வாங்கவிலலையினாலும் உங்களுக்கு நான் பீஸ் கட்டுகிறேன். பாடம் கேட்க எனக்கு உரிமை இருக்கு'' என்றேன். என்னடா இவன் தகராறு பிடிச்சவன்போல என்று என்னை ஓய்வறைக்கு வா என்றார். உடனே நான் ``சார், எங்கிட்ட இரண்டு புஸ்தகம் வாங்க காசில்லை. எங்க அம்மா தமிழ், இங்கிலீஷ் புஸ்தகம் இரண்டு பேருக்கும் சேர்த்து ஒண்ணுதான் வாங்கித் தருவாங்க'' என்றேன். கூடவே ``நீங்கள் பாடம் நடத்தும் விதம் எனக்குப் பிடிச்சிருக்கு. அதற்கு நான் பீஸ் கட்டுகிறேன். பாடம் கேட்க எனக்கு உரிமை உண்டு'' என்றேன். உடனே என் நிலைமையைப் புரிந்து கொண்டு அவரே புஸ்தகம் வாங்கிக் கொடுத்தார். கல்லூரி லைப்ரரி பற்றிச் சொன்னேன் இல்லையா? அங்கிருக்கும் லைப்ரரியனுக்கு முக்கியமான வேலை என்ன தெரியுமா? லைப்ரரிக்கு வருகின்ற பசங்களை போய் பாடப் புஸ்தகங்களை படிங்கடா என்று துரத்தியடிப்பதுதான்.பம்மல் சம்பந்தமுதலியார் இருக்கின்றார் தெரியுமா? அவர் இருநூறு புஸ்தகம் எழுதி இருக்கிறார். அந்த புஸ்தகம் எல்லாம் அந்த லைப்ரரிக்கு வரும். ஒரு டிக்கெட் வைத்துக் கொண்டு புஸ்தகம் வாங்கி படித்துவிட்டு மறுநாளே போய் திருப்பிக் கொடுப்பேன். ``இதுல பதிநாலு நாள்தானே கெடு போட்டு இருக்கு உடனே திருப்பி வேற புஸ்தகம் கேட்குற'' என்று லைப்ரரியன் வம்பு பண்ணுவார். உடனே நான் சண்டை போட்டுக் கொண்டிருப்பேன். அப்படி சண்டை போடும்போது ஒருநாள் சஞ்சீவி பார்த்துவிட்டார். விசாரித்தபோது விஷயத்தை அவரிடம் சொன்னேன். உடனே அவர் இந்தப் பையனுக்கு மட்டும் என்னுடைய கணக்கில் எவ்வளவு புஸ்தகம் கேட்டாலும் கொடுங்கள் என்றார். இப்படி சின்ன வயசிலிருந்தே தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கென்று ஒரு தனியான கற்பனையான உலகம் உருவாகிவிடும். பிறகு உங்களுக்கு நிஜ உலகத்தைப் பற்றி எந்தக் கவலையும் இருக்காது. தனிமை விரும்பியாகிவிடுவீர்கள் நீங்கள். அந்தக் காலத்தில் காஞ்சிபுரத்தில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அந்த ஏரியைச் சுற்றி பனைமரக்காடு இருந்தது. அந்தக் காட்டில் தனியாளாக சுற்றித் திரிவது மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். மதிய நேரத்தில் யாருமே இல்லாத பனைமரக் காட்டில் அந்தப் பனை மரங்கள் காற்றில் சப்தமிட்டு சலசலக்கும் ஓசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதற்காகவே நிறைய ஊர் சுற்றுவேன். கல்லூரி விடுமுறை நாட்களில் புஸ்தகம் கிடைக்காதில்லையா... அந்த மாதிரி நேரத்தில் இதுபோல சுற்றுவது பிடித்தது. அப்போது ஒரு நண்பன் ``ராமகிருஷ்ண மடம் இங்கே இருக்குடா, அங்கே நிறைய புஸ்தகமெல்லாம் இருக்குடா'' என்றான். உடனே அடிச்சுபிடிச்சு மூன்று கிலோ மீட்டர் போய்ப் பார்த்தால் ``வெளியில் எல்லாம் எடுத்துக்கிட்டு போகக்கூடாது. இங்கே மடத்துக்குள்ளயேதான் படிக்கணும்'' என்று அங்குள்ள சாமியார் சொன்னார். மடத்தில் என்னோட ரசனைக்குத் தகுந்த மாதிரியான கதைப் புஸ்தகங்கள் இல்லை. வேதாந்தம் அது இதுவென்று ஏதேதோ புஸ்தகங்கள் இருந்தன. சரி, என்று சில இங்கிலீஷ் நாவல்களை எடுத்துப் படித்தேன். அப்படிப் படிக்கும்போது பல இங்கிலீஷ் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாது. உடனே அந்த வார்த்தைகளையெல்லாம் ஒரு நோட்டில் எழுதி எடுத்துக் கொண்டு வந்துவிடுவேன். மறுநாள் அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள மடத்திற்குச் சென்று அங்குள்ள டிக்ஷ்னரியில் பார்த்துத் தெரிந்து கொள்வேன். அப்போது ஒருநாள் இந்த டிக்ஷ்னரியை கொடுங்கள் சாமீ என்று கேட்டேன். கூடவே இரண்டு மூன்று புஸ்தகங்களையும் கேட்டேன். அதெல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இந்த சாமியாரை சரிக்கட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்து அந்த சாமியாருக்குத் துணியெல்லாம் துவைத்துப்போட ஆரம்பித்தேன். அதன் மூலம் பழக்கம் நெருக்கமானது. அதை வைத்து புஸ்தகங்கள் கேட்டேன். இருநூறு பக்க புஸ்தகத்தை கொடுத்துவிட்டு மறுநாளே கொண்டு வந்துவிட வேண்டும் என்பார். இரவெல்லாம் கண்விழித்துப் படித்தாலும் 100 பக்கம்தான் படிக்க முடியும். இருந்தாலும் மறுநாள் நான் சொன்ன மாதிரியே தவறாமல்கொண்டுபோய்க் கொடுத்துவிடுவேன். ``என்னடா படிச்சுட்டீயா'' என்று கேட்பார். ``இல்ல.. சாமி... கொஞ்சம் பாதிதான் படிச்சேன். நீங்கதான் உடனே திருப்பி எடுத்துக்கொண்டுவான்னு சொன்னீங்களே''ன்னு பதில் சொல்லுவேன்.``சரி, கொண்டுபோய் படிச்சிட்டு கொண்டுவா''ன்னு சொல்லுவார். இந்த இடத்தில் இன்னொரு பியூட்டி என்னவென்றால், விவேகானந்தரை படிச்சா கடவுளைப் பார்க்கலாம்னு திருக்கழுக்குன்றத்துல இருக்குற சாமியார் ஒருத்தர் சொன்னார் என்று உடனே அவரைப் பார்க்கப் போனேன். போய் ``சாமீ நானும் விவேகானந்தரையெல்லாம் படிச்சிருக்கேன். நீங்க ஏதோ கடவுளை எல்லாம் பார்க்குறீங்கன்னு கேள்விப்பட்டேன்'' என்றதும் அவர் ``நான் தினம் கடவுளைப் பார்க்கிறேன்'' என்றார். ஒரு நாள் விடாமல் தொடர்ந்து அவரைப் பார்க்கப் போனேன். அவரும் கடவுளை காண்பிக்கிறேன். கடவுளை காண்பிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே இருந்தார். எனக்கு கோபம் வந்துவிட்டது. இவர் ஏதோ திருடன் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டு ``சாமீ... நான் தொடர்ந்து ஒரு வருஷமா வர்றேன். நீ கடவுளையே காண்பிக்க மாட்டங்குற'' என்றேன். உடனே அவர் ``இன்னைக்கே என்னோட உயரத்துக்கு உன்னால வர முடியுமா?''ன்னு கேட்டார். அப்போது எனக்கு அது புரியவில்லை. பிற்பாடு அந்த வார்த்தைக்குள் இருக்கும் வேறு அர்த்தம் பிடிபட்டது. சரி, மடத்தில் இருந்த சாமியார் கதைக்கு வருவோம். அப்படி துணி துவைத்து போட்டுவிட்டு புஸ்தகம் வாங்கிக் கொண்டிருந்த சாமியிடம் ``இவ்வளவு பெரிய புஸ்தகமா இருக்கு சாமீ... ஒரு நாலு அஞ்சு நாளு டைம் கொடுங்களேன்''னு கேட்டேன். ``உனக்கு என்னடா புரியும் இதுல'' என்றார் அவர். நான் கேட்டேன் ``நீங்க படிச்சு இருக்கீங்களா சாமீ'' என்றேன். ஒரு வாரம் டைம் கொடுத்தால் உங்க துணியை துவைப்பேன். இல்லையின்னா நான் வரவேமாட்டேன் என்றதும் சரி என்று ஒத்துக் கொண்டார். இப்படி புஸ்தகம் படிப்பதற்காக எவ்வளவோ காரியங்களைச் செய்திருக்கிறேன்.எங்கள் பேராசிரியர் சஞ்சீவி தமிழரசு கழகத்தைச் சேர்ந்தவர். மா.பொ.சி.யின் கட்சியைச் சேர்ந்தவர். அவருடைய அரவணைப்பின் பேரில் நிறைய புஸ்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்துப் படித்தேன். காஞ்சிபுரத்தில் படிப்பை முடித்துக் கொண்டு மெட்ராஸுக்கு குடிபெயர்ந்தோம். இங்கு வந்ததும் பச்சையப்பன் கல்லூரியில் பி.காம். சேர்ந்தேன். அப்போது முரசொலி மாறன், நாஞ்சில் மனோகரன் பி.ஏ. ஆனர்ஸ் கடைசி ஆண்டு மாணவர்கள். இங்கு வந்ததும் அதே மாதிரி லைப்ரரியே கதி. அப்போது எல்லாம் லைப்ரரியில் டிக்கெட் கொடுப்பார்கள் இல்லையா? அதில் பிகாம் என்று போட்டிருக்கும். ஆனால் நான் இங்கிலீஷ் லிட்ரேச்சர் புத்தகத்தைக் கேட்பேன். அங்கிருந்த செங்கல்வராயன் நாயுடு என்ற லைப்ரரியன் ``நீ பிகாம்தானடா படிக்குற? அப்புறம் எதுக்கு இங்கிலீஷ் லிட்ரேச்சர் புத்தகம் கேட்கிற?'' என்று கொடுக்கமாட்டார். எப்படியாவது புத்தகம் வாங்கியாக வேண்டுமே? உடனே அவருக்கு ஏதாவது எடுபிடி வேலை செய்வேன். அப்படிப் படிப்பதில் பெரிய ஈடுபாடு. அதற்காகத்தான் இந்த எடுபிடி வேலையெல்லாம். அந்த நேரத்தில்தான் கன்னிமரா லைப்ரரி என்று ஒன்று இருக்கிறது, மிகப் பெரிய லைப்ரரி என்று கேள்விப்படுகிறேன். 1954ல் உள்ளே போகிறேன். கேள்விப்பட்டது போலவே எங்கு பார்த்தாலும் ஒரே புஸ்தகம். கல்லூரி லைப்ரரியில் உள்ளே விடவில்லை. ராமகிருஷ்ண மடத்தில் உள்ளே விடவில்லை. ஆனால் கன்னிமராவில் கடல் போல புஸ்தகங்கள். உள்ளே போய் தாராளமாக படி என்று இஷ்டத்திற்கு திறந்துவிட்டார்கள். ஒரே ஆச்சர்யம். சந்தோஷம் தாளமுடியவில்லை.கன்னிமராவில் உறுப்பினராக வேண்டுமென்றால் அந்தக் காலத்தில் கவுன்சிலர்தான் ரெக்கமென்ட் செய்ய வேண்டும். அன்று இதுதான் விதி. திறந்துவிட்டும் அனுபவிக்க முடியவில்லை. ஒருமாசம் அவதிப்படுகிறேன். எங்கள் மாமா மூலமாக லக்ஷ்மணன் முதலியார் என்று ஒரு ஜட்ஜ்கிட்ட போய் கையெழுத்து வாங்கினேன். அவர்தான் எம்.ஆர்.ராதா வழக்கை விசாரித்தவர், தீர்ப்பு அளித்தவர். தமிழ்நாட்டில் ஒரு லைப்ரரியில் உறுப்பினர் ஆக இவ்வளவு சிக்கல்கள். ஆனால் 2005_ல் லண்டன் போனேன். அங்குள்ள லைப்ரரிக்கு உள்ளே போய் புஸ்தகம் கேட்டால் `உங்களுக்கு வங்கிக் கணக்கு இருக்கிறதா?'' என்றார்கள். ``இல்லை. என்னுடைய மகன் இங்கே வேலை செய்கிறான். நான் அவனைப் பார்க்க இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்' என்றதும் ``இப்போது கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கிறீர்களா?'' ``இல்லை'' என்றதும், ``உங்கள் மகனின் வருமான வரி எண் தெரியுமா?'' என்றார்கள். ``தெரியாது'' என்றேன். `சரி, வீட்டிற்குச் சென்றதும் ஈமெயிலில் அனுப்புங்கள் முகவரி கொடுத்துவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்கள். `எத்தனை புஸ்தகங்கள் எடுக்கலாம்' என்று கேட்டதற்கு `எத்தனை புஸ்தகம் எடுக்கப் போகிறீர்கள்' என்கிறார்கள். `நான் 19 புஸ்தகம்' என்றதும் `சரி' எடுத்துக் கொள்ளுங்கள் என்று சர்வசாதாரணமாக சொல்லிவிட்டார்கள். இதுதான் பிரிட்டீஷ்காரனின் அணுகுமுறை.தீராநதி : 2005-ல் இந்த மாதிரியான ரூல்ஸ் அங்கு இருந்தது என்பது வாஸ்தவம். ஆனால் ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் அங்கு இதே விதிமுறை இருந்திருக்குமா?கி.அ. சச்சிதானந்தம் : ஆமாம். 1960-ம் ஆண்டு கூட இதே ரூல்ஸ்தான் இருந்திருக்கிறது. அங்கிருக்கும் லைப்ரரியிலிருந்து திருடி வந்து புஸ்தகத்தை வெளியில் விற்க முடியாது. யாரும் வாங்கமாட்டார்கள். நூலகத்திலேயே பத்து சதவீத புஸ்தகங்கள் ஆண்டுக்கு திருடு போய்விட்டால் நல்லதென்று நினைக்கிறார்கள். ஏனென்றால் அவ்வளவு புஸ்தகங்களை பராமரிப்பது கஷ்டமாக இருக்கிறது என்பதால். அவர்களுக்கு இடநெருக்கடி. அவர்கள் லைப்ரரியில் ஒரு பெரிய பெட்டி வைத்திருப்பார்கள். கம்ப்யூட்டரில் ஒரு வருடத்திற்கு மேலாக யாரும் எடுத்து என்ட்ரி போடாமல் இருக்கும் புஸ்தகத்தை தூக்கி அந்தப் பெட்டியில் போட்டுவிடுவார்கள். நீங்கள் விரும்பிய தொகையை கொடுத்துவிட்டு உங்களுக்கு தேவையான புஸ்தகத்தை எடுத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் புஸ்தகங்கள் புதியதாக நூலகத்திற்குள் வருகிறது.
தீராநதி : சரி, உங்களுக்கு சி.சு. செல்லப்பாவுடன் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கி.அ. சச்சிதானந்தம் : போஸ்டல் ஆடிட்டில் வேலை கிடைத்தது. ரொம்ப சௌகர்யமான வேலை. ஒரு நாளைக்கு ஆயிரம் மணியார்டரை செக் பண்ணிவிட்டால் போதும். பக்கத்திலுள்ள கன்னிமரா லைப்ரரிக்குப் போய்விடுவேன். அலுவலகத்தில் என்னை யாராவது தேடினால் உடனே லைப்ரரிக்குத்தான் வருவார்கள். யானைக்கால் அய்யங்கார் என்ற ஒருத்தர் போஸ்டல் ஆடிட்டில் இருந்தார். அவர் சில புஸ்தகங்களை அறிமுகம் செய்தார். ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் `முரசொலி' அலுவலகத்திற்குப் பக்கத்திலுள்ள பெட்டிக் கடையில் `எழுத்து' என்று ஒரு பத்திரிகை அழுக்கு கலரில் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது (1959-60) அரை ரூபாய் இருந்தது. அதன் பிறகு 25 காசு. அப்புறம் 50 காசு. அந்தப் பத்திரிகையை ஒன்று வாங்கிப் புரட்டிப் பார்த்தால் `புதுக் கவிதை' என்று போட்டிருந்தது. அதற்கு முன் வால்ட் விட்மன் எல்லாம் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன். இதுமாதிரி யாரும் ஏன் தமிழில் எழுதவில்லை என்று யோசித்திருக்கிறேன். `எழுத்து' பத்திரிகையில் புதுக்கவிதை என்று இருந்ததை `படித்தபோது ஒரே மகிழ்ச்சி. உடனே அலுவலகத்தில் இருந்த ஆபீஸ் பாயைக் கூப்பிட்டு' 19ஏ பிள்ளையார் கோவில் தெருவில் இருக்கின்ற `எழுத்து' ஆபீஸுக்குப் போய் பழைய மாத `எழுத்து', புதிய மாதத்திற்கான `எழுத்து' என்று எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டுவா' என்று சொல்லி அனுப்பினேன். அவன் போய் பார்த்துவிட்டு அங்கே யாரும் இல்லை சார். அவர் பத்திரம் எழுதுறவர் சார் என்று திரும்பிவிட்டான். மறுநாள் நான் திரும்பவும் சொல்லி பத்திரிகையை எடுத்துக் காண்பித்து அனுப்பி வைத்தேன். போனவன் சில பழைய `எழுத்து' இதழ்களை வாங்கி வந்தான். சில நாள் கழித்து ஜப்பானிய சிறுகதை ஒன்றை மொழிபெயர்த்து கையில் எடுத்துக் கொண்டு செல்லப்பாவை பார்க்கப் போனேன். கீழே அவரது மனைவி நின்று கொண்டிருந்தார். `செல்லப்பா என்று ஒருவர் இங்கே இருக்கிறாரா?' என்றேன். `மேலே இருக்கார் போக' என்றார். உள்ளே போனால் சின்ன ரூம். விளக்கை போட்டுக் கொண்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தார். ஆபீஸ் பாயை அனுப்பி புஸ்தகம் வாங்கியதைச் சொல்லி அறிமுகம் செய்துகொண்டேன்.. சரி, என்று உட்காரச் சொன்னவர் பேச ஆரம்பித்தார். மாலை நான்கு மணிக்கு உள்ளே போனேன். இரவு பத்து மணிக்குதான் வெளியே வந்தேன். நான்-ஸ்டாப்பான பேச்சு. புதுமைப்பித்தன், டி.எஸ்.எலியட் என்று அது இது என்று பேசிக்கொண்டே இருந்தார்.``சார்... நான் ஜப்பானிய சிறுகதை ஒன்று மொழிபெயர்த்திருக்கிறேன். முதலில் நீங்கள் படித்துப் பாருங்கள்'' என்று கொடுத்துவிட்டு வந்தேன். உடனே அதை அடுத்த இதழில் போட்டுவிட்டார். Lifeல் வந்த கதை அது. அதைத்தான் நான் மொழிபெயர்த்திருந்தேன். ரொம்ப நல்ல கதை. இப்படித்தான் செல்லப்பாவுடன் நட்பு உண்டானது. கடம்பட்டு ராமகிருஷ்ணன் என்று ஒரு மலையாளக் கவிஞர். அவனும் நானும் ஏ.ஜி.எஸ். ஆபீஸில் சக ஊழியர்கள். நான்தான் அவனின் முதல் ரசிகன். சில மாதங்களுக்கு முன்னால்தான் இறந்துபோனான். மகா குடிகாரன். காலை பத்து மணிக்கே இரவில் தான் எழுதிய கவிதையை எடுத்துக்கொண்டு வந்து ஆபீஸில் என் நாற்காலி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ராகம் போட்டு படிப்பான். எங்கள் செக்ஷனின் கோபால நாயர் என்று ஒரு அதிகாரி இருந்தார். அவருக்கு ராமகிருஷ்ணன் கவிதையை படிக்க ஆரம்பித்தால் கடுகடுவென்று கோபம் வந்துவிடும். ``இனிமேல் ராமகிருஷ்ணனை உள்ளேவிட்டாய் என்றால் உன் வேலை போய்விடும்'' என்று `என்னிடம் சொல்லிவிட்டு போய்விட்டார். ராமகிருஷ்ணன் என்னிடம் வை.கோவிந்தன் என்று ஒருத்தர் இருக்கிறார். `சமிக்ஷா' என்று ஒரு பத்திரிகை நடத்திக் கொண்டிருக்கிறார். நீ அவரைச் சந்திக்க வேண்டும்' என்று என்னை சித்ரா டாக்கீஸ் (இன்று மௌண்ட்ரோடில் பாட்டா செருப்பு கடை இருக்கும் இடம்) இருந்த இடத்திற்குப் பின்னால் கூவம் பாலத்தைத் தாண்டி இருந்த அவரது அலுவலகத்திற்கு அழைத்துக் கொண்டு போனான். கடம்பட்டு ராமகிருஷ்ணன் வெறும் டீ, பீடியைக் குடித்துவிட்டு எவ்வளவு தூரம் வேண்டும் என்றாலும் நடந்தே போய்விடுவான். அன்றைக்கும் ``நீ மாடிக்கு மேலே போ... நான் பின்னால் பீடி அடித்துவிட்டு வந்துவிடுகிறேன்'' என்று சொல்ல நான் மேலே போனேன். ஒருவர் ஆணி அடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் கோவிந்தன் இருக்கிறாரா என்றதும் கீழே இறங்கி அறையின் உள்ளே போனவர், `என்ன விஷயம்' என்றார். அவரைப் பார்க்க வேண்டும் என்றதும் `நான்தான் கோவிந்தன்' என்றார். பார்த்த மாத்திரத்திலேயே அவரின் எளிமை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அவர் நடத்திய `சமிக்ஷா'வில் நான் எழுதிக் கொடுத்தவற்றை அவர் வெளியிட்டார். நான் எழுதி முதல்முதலாக காசு கிடைத்தது அவரது பத்திரிகையில்தான். கல்கத்தாவிற்குச் சென்று நான் திரும்பிய அனுபவத்தை வைத்து `கல்கத்தா டைரி' என்று ஒரு கட்டுரை எழுதினேன். அதை அவரே மொழிபெயர்த்து `சமிக்ஷா'வில் வெளியிட்டார். ரொம்ப அருமையான கட்டுரை அது. நான் மௌனி பற்றி எழுதிக் கொடுத்தேன். அதையும் வெளியிட்டார்.வை.கோவிந்தனைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் ஒரு சாக்ரடீஸ். அவர் வீட்டில் தகழியைப் பார்த்திருக்கிறேன், வைக்கம் முகம்மது பஷீரைப் பார்த்திருக்கிறேன். காரு. நீலகண்டபிள்ளை, ஆனந்தன், இயக்குநர் அரவிந்தன், அடூர் கோபாலகிருஷ்ணன் எல்லாம் வருவார்கள். அவர் உயிரோடு இருக்கின்ற வரை மெட்ராஸில் இலக்கியக் கூட்டம் போட்டார். அங்கு எல்லா மொழிக்காரர்களும் பங்கு கொள்வார்கள்.தீராநதி : கூட்டத்தை எந்த இடத்தில் போடுவார்?கி.அ. சச்சிதானந்தம் : மகாஜன ஹாலில்தான் போடுவார். ஆனந்தகுமாரசாமி வந்து பேசிய இடம் அது. பாரதியார் பேசிய இடம். முதன் முதலாக ஆல் இண்டியா ரைட்டர்ஸ் மாநாடு நடத்தியவர் அவர்தான். அதில் செல்லப்பா, க.நா.சு. மௌனி, நகுலன் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். தினமும் செல்லப்பா வீட்டிற்குப் போவேன், இல்லையென்றால் கோவிந்தன் அலுவலகத்திற்குப் போவேன். இந்த இடம்தான் கதியென்றுகிடப்பேன். அதே போல தி.ஜானகிராமனும் இலக்கியக் கூட்டங்கள் போடுவார். அப்போது அவர் சென்னையிலுள்ள ஆல் இண்டியா ரேடியோவில் வேலை பார்த்தார். ஜானகிராமன் போடும் இலக்கியக் கூட்டத்திற்கு செல்லப்பாதான் என்னை முதன் முதலில் அழைத்துக் கொண்டு போனார். ஜானகிராமன் தான் எழுதும் கதைகளைப் பற்றி செல்லப்பாவிடம்தான் அடிக்கடி அபிப்ராயம் கேட்பார். ஜானகிராமனின் சில கதைகள் சம்பந்தமாக செல்லப்பா வெளிப்படையான அறிவுரைகள் சொல்ல இருவருக்குக் கருத்து வேறுபாடுகள் வந்துவிட்டதால், அதற்குப் பிறகு கூட்டத்திற்குப் போவதை செல்லப்பா நிறுத்திக் கொண்டார். அப்படி கருத்து வேறுபாடுகள் வருவதற்கு முன்பாகவே என்னை ஜானகிராமனுடன் அறிமுகப்படுத்திவிட்டார் செல்லப்பா. நான் மட்டும் தனியாக கூட்டத்திற்குப் போக ஆரம்பித்தவுடன் செல்லப்பாவிற்கு வருத்தம் வந்துவிட்டது. க.நா.சு. மட்டும்தான் அந்த விஷயத்தில் பெருந்தன்மையானவர். ``நீ எந்த ஆளிடமாவது போ. எனக்கு கவலை இல்லை'' என்று சொல்வார். தனக்கு சிஷ்யனே வேண்டாம் என்று நம்பியவர் அவர். நான் செல்லப்பாவிடம், ``சார் ஜானகிராமன் கூட்டத்திற்குப் போகலாமா?'' என்று கேட்டேன். உடனே காச்சுமூச்சு என்று கத்திவிட்டார். ஒவ்வொரு முறையும் செல்லப்பாவிடம் எப்படியாவது சண்டையே இல்லாமல் சமாதானமாகிவிடவேண்டும் என்றுதான் அவர் வீட்டுக்குப் போவேன். ஏதாவது பேச புது சண்டை வந்துவிடும். ``சார்... அவர் கொடுக்கின்ற பலகாரம் நன்றாக இருக்கிறது. அதற்காகவாவது போகலாமே?'' என்றதும் கடுங்கோபம் வந்துவிட்டது அவருக்கு. அதோடு நிற்காமல் ``சார்.. அவர் பொண்ணு ரொம்ப நல்லா அழகா இருக்கு. அதைப் பார்க்கவாவது போகக் கூடாதா?'' என்றும் கேட்டுத் தொலைத்துவிட்டேன் ``உனக்கு என்ன வயது? எனக்கு என்ன வயசு? இதெல்லாம் என்கிட்ட பேசலாமா நீ?'' என்று முறைத்தார். ஜானகிராமன் கூட்டத்திற்கு போட்டியாக `எழுத்து' கூட்டம் என்று செல்லப்பா தன் வீட்டில் கூட்டம் போட்டார். அங்குதான் பிரமிள், வெங்கட்சாமிநாதன், ந. பிச்சமூர்த்தி, ந.முத்துசாமி, சி.மணி, வி.து. சீனிவாசன் _ இவர்தான் என் குரு. எம்.ஏ. ஃபிலாஸஃபி படித்தவர். அவரோட வாழ்க்கையை எழுதினாலே ஒரு நாவலாயிடும். அவ்வளவு பெரிய அறிவாளி. அதே அளவுக்கு சொந்த வாழ்க்கையில் தோற்றுப் போனவர். பிறகு இவர்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். இந்தக் காலகட்டத்தில்தான் இலங்கையிலிருந்து தர்மு சிவராமு `எழுத்து, பத்திரிகைக்கு நிறைய கடிதங்கள் எழுதினான். என்னிடம் அதே போல எழுதிய முந்நூறு லெட்டர்கள் இன்னும் இருக்கிறது. தர்மு சிவராமு என்பவனை அதுவரை இந்த ஊர் ஆள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தமிழ் உரைநடைக்கு தர்மு சிவராமுதான் புதிய கோணத்தைக் கொடுத்தான். அதை நீங்கள் மறுக்கவே முடியாது. என்னைக்கூட எவ்வளவோ திட்டி எழுதி இருக்கிறான். அது முக்கியமில்லை. சிவராமுவின் உரைநடை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவனின் கவிதைகளில் எல்லாம் எனக்குப் பிடிக்காது.அந்தக் காலத்தில் பாஸ்கரன் என்று ஒருத்தர் இருந்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் துறை அதிகாரியாகப் பணிபுரிந்தவர். பேராசிரியர். ரொம்பத் திமிர் பிடித்தவர். ஆனாலும் பெரிய படிப்பாளி. அவர் ஒரு நாள் செல்லப்பாவிடம் வந்து ``ஹு இஸ் தட் ஃபிலோ தர்மு சிவராமு? இஸ் ரைட்டிங் வெரி குட் மேன்'' என்று சொல்லி, அவனுடைய எழுத்துக்களை நிறைய வெளியிட்டு அவனை உற்சாகப்படுத்து'' என்று சொல்லி ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு போய்விட்டார். நான் செல்லப்பாவிடம், ``யாரு சார்... இந்த ஆள். ரொம்ப நல்லா எழுதுறானே?'' என்று கேட்டேன். இப்போதும் எழுத்தில் வந்த சிவராமுவின் எழுத்துகளை வாசித்தீர்கள் என்றால் ரொம்ப பிரமாதமாக இருக்கும். புதிய ஸ்டைலில் எழுதி இருப்பான். அந்த புதிய பாணி உரைநடையை எழுதிய பிரமிளுக்கு அன்றைக்கு வயது என்ன தெரியுமா வெறும் 19. செல்லப்பாவிடம் கேட்டதற்கு அவர், ``அவன் இந்த ஊர்க்காரன் இல்லப்பா... சிலோன்காரன்'' என்று சொன்னார். ஒருநாள் காலை நான் ஆபீஸுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது செல்லப்பா ஒருவரை என் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார். ``இவன்தான் தர்மு சிவராமு'' என்று அறிமுகப்படுத்தினார். அவன் பேசிய தமிழே எனக்குப் புரியவில்லை. வந்தவன் ``ரொம்ப பசியா இருக்கு'' என்றதும் காபி கொடுக்கச் சொன்னேன். உடனே அவன் ``எனக்கு காபி எல்லாம் பிடிக்காது பால்தான் சாப்பிடுவேன்'' என்றான். சரியென்று பால் கொடுத்தேன்.என் வீட்டில் ழீன்பால் சார்த்தரின் `ஜெயின்ட் ஜெனே' என்று ஒரு பெரிய புத்தகம் இருந்தது. அதைப் பார்த்ததும் சிவராமு ``இது உனக்குப் புரியுதா?'' என்றான். எனக்கு ஒரே கோபம், தம்மாத்துண்டு பையன் இவன் நம்மிடம் ரொம்பத் திமிரா பேசுறானே என்று. இப்படியே பழக்கமாகி பிறகு என் வீட்டிலேயே சில காலம் தங்கியும் இருந்தான். அது இருக்கட்டும். `எழுத்து' எதற்கு தொடங்கப்பட்டது என்று தெரியுமா உங்களுக்கு?`சுதேசமித்திரன்' என்ற பத்திரிகையின் தீபாவளி மலரில் ஒரு விவாதம், சிறுகதை வளர்ந்திருக்கிறதா? இல்லையா? என்று. அதில் சி.சு. செல்லப்பா `வளரவில்லை' என்று ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தார். அவர்கள் போடமாட்டேன் என்று மறுத்துவிட்டார்கள். அப்போதுதான் செல்லப்பா முடிவு பண்ணினார். ஏற்கெனவே செல்லப்பாவுக்கு பத்திரிகை அனுபவமுண்டு. க.நா.சு. சந்திரோதயம், சூறாவளி என்று பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருந்தார். அதில் சி.சு. செல்லப்பா உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார். முதன் முதலாக `வாடி வாசல்' சந்திரோதயம், சூறாவளியில்தான் வெளிவந்தது. அதற்கு முன்னால் `சுதந்திர சங்கு' என்று ஒரு காந்திய பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. அதில்தான் செல்லப்பாவின் முதல் சிறுகதை வெளிவந்தது. சங்கு சுப்பிரமணியன் தான் அதன் ஆசிரியர். அவர் எழுத்தாளர்களை ஊக்குவித்து வந்தார். அவர் எப்படி கதை எழுத வேண்டும் என்றெல்லாம் `வகுப்பெடுத்துக்' கொண்டிருந்தார். அதற்கு செல்லப்பா போவார். செல்லப்பாகூட சுதந்தர சங்குவில்தான் நான் பிறந்தேன் என்று எழுதி இருக்கிறார். க.நா.சு. சிட்டி, பி.எஸ். ராமய்யா போன்ற மணிக்கொடி நண்பர்கள் கூடி செல்லப்பாவை `எழுத்தை' ஆரம்பி, நாங்கள் அதில் எழுதுகிறோம் என்றார்கள். உடனே செல்லப்பா `எழுத்து'வைத் தொடங்கினார்.
தீராநதி : நாம் தர்மு சிவராமு சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். அதைவிட்டு நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறோம்.
கி.அ. சச்சிதானந்தம் : சிவராமு சிதம்பரத்தில் தங்கி இருந்தான். தமிழ்ப்புத்தாண்டு வருகிறது உடனே நீ புறப்பட்டு வரவும் என்று எனக்கு சிவராமு தந்தி அனுப்பினான். ``மௌனியை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். நீ கட்டாயம் மௌனியை பார்க்க வேண்டும்'' என்று சொன்னதால் சிதம்பரத்திற்கு நான் போனேன். அன்றைக்கெல்லாம் சிதம்பரத்திற்குப் போவதென்றால் பெரிய சிக்கல். பஸ்ஸெல்லாம் அடிக்கடி கிடையாது. அப்போது மௌனி தெற்கு ரத வீதியில் குடி இருந்தார். வீரராகவன் தெருவில் அவருடைய அரிசி மில் இருந்தது. அங்குதான் நண்பர்களைத் தங்க வைப்பார் மௌனி. வீட்டுக்கே போய்விடலாம் என்று பிரமிள் சொன்னதால் கொளுத்தும் வெயிலில் குடையை பிடித்துக் கொண்டு மௌனி வீட்டுக்குப் போனோம். போகின்ற வழியில் சிவராமு ``மௌனி ஒரு மாதிரியான ஆளு. சில நேரத்தில் முகம் கொடுத்துப் பேசுவார். சில நேரத்தில் பேசாமல் இருந்தாலும் இருந்துவிடுவார். மௌனி உன்னிடம் பேசவில்லை என்றால், நீ என் மீது கோபித்துக் கொள்ளக்கூடாது'' என்றான். எனக்குக் கோபம் வந்துவிட்டது. ``என்னடா விளையாடுறீயா? நான் வீட்டுக்கே திரும்பிப் போய்விடுகிறேன்'' என்றதும், ``இல்ல... இல்ல.... ஒரு முன்னெச்சரிக்கைக்காக சொல்கிறேன் அவ்வளவுதான் ஆனால் நீங்க வர்றீங்கன்னு அவர்கிட்ட முன் கூட்டியே சொல்லிட்டேன்'' என்றான்.இன்றைக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது எனக்கு. கண் முன்னால் மௌனி நிற்கிறார். கூடத்தில் ஒரு பெஞ்சு போட்டு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு சட்டை போடாமல் எழுதிக் கொண்டிருந்தார். இவர்தான் மௌனி என்றான் சிவராமு. ``நீ உள்ளே போ நான் திண்ணையிலேயே உட்கார்ந்து இருக்கிறேன்'' என்று சொல்லிவிட்டான். மௌனிக்கு நான்கு பிள்ளைகள். அதில் வசந்தன் என்று ஒருத்தன் இருந்தான். எம்.ஏ., பி.எட் படித்தவன். அவனுக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிற்பாடு திடீரென்று பைத்தியம் பிடித்துவிட்டது. அவன் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பான். யாராவது போனால் மூக்குப்பொடி கேட்பான். வீட்டிற்கு உள்ளே போனவுடனேயே என்னை அவன் (வசந்தன்) மடக்கிவிட்டான். ``தெரியுமா? பக்கத்து தெருவுல பெரிய கொலை நடந்துடுச்சு. போலீஸ்காரன் எல்லாம் வந்துவிட்டான். பெரிய கலாட்டா ஆயிடுச்சு'' என்றான். உடனே மௌனி ஓடிவந்து என்னை அழைத்துக் கொண்டு உள்ளே போய்விட்டார். கொலை நடந்ததாக அவன் சொன்னது பத்து வருடத்திற்கு முந்தி நடந்த கதை. அந்தக் கதையை என்னிடம் அவன் நேற்று நடந்தது மாதிரி சொல்கிறான். மௌனியைப் பார்த்தவுடனேயே எனக்குப் பிடித்துபோய்விட்டது. எப்படி செல்லப்பாவைப் பார்த்தவுடன் எனக்கு பிடித்ததோ அதேபோல்.``சரி, நீங்க நேத்து ராத்திரி வர்றன்னு சொன்னீங்க. ஏன் வரலை?'' என்றார். காத்துக் கொண்டிருந்து இருக்கிறார். அவர். நான் அவரிடம் ``சார்.. எங்க அப்பா இங்க இருக்குற அண்ணாமலை காலேஜுலதான் பி.ஏ. படிச்சாரு'' என்று சொன்னேன். ``அப்போ மீனாட்சி காலேஜுன்னுதானே இதுக்குப் பேரு?'' என்றார். ``ஆமாம்... பி.ஏ. ஃபிலாஸஃபிதான் சார் படிச்சிருக்கார்'' என்றேன். உடனே. தங்கு தடையில்லாமல் பேசிக் கொண்டே இருந்தார். அன்றையிலிருந்து தர்மு சிவராமு அவரை விட்டுவிட்டான். நான் அவரைப் பிடித்துக் கொண்டேன். தர்மு சிவராமுக்கும் மௌனிக்கும் பெரிய சண்டையே நடந்தது. அது ஒரு பெரிய கதை
.தீராநதி : அவர்கள் இருவருக்கும் என்ன கருத்து முரண்பாடு?
கி.அ. சச்சிதானந்தம் : திரிகோணமலையில் இருந்த தன்னுடைய வீட்டை விற்றுவிட்டான் சிவராமு. அந்தக் காலத்தில் சிலோனிலிருந்து இந்தியாவிற்கு பணத்தைக் கொண்டு வருவது ரொம்ப கஷ்டம். அதனால் மௌனியிடம் ``சார் உங்க பேங்க் அக்கவுண்ட்டுக்கு அனுப்புகிறேன். நீங்கள் எனக்கு எடுத்துக் கொடுத்துவிடுங்கள்'' என்றான். அவர் ``அதெல்லாம் சட்டவிரோதம். நான் வருமானவரி கட்டுகிறேன். அதுவெல்லாம் சரிப்பட்டு வராது என்று மறுத்துவிட்டார்.'' அதெல்லாம் சிவராமு புரிந்து கொள்ளமாட்டான். அதே போலதான் நானும் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.
தீராநதி : நீங்கள் என்ன சிக்கலில் மாட்டிக் கொண்டீர்கள்?
கி.அ. சச்சிதானந்தம் : ஒருநாள் ஏதோ பேச்சு வருகின்றபோது என்னுடைய `வீசா' முடிவடைந்துவிட்டது. அதைப் புதுப்பித்துத் தர வேண்டும் என்றான். கிருஷ்ணன்மேனன் என்று ஒருத்தர் எனக்குத் தெரிந்தவர் இருந்தார். புகழ் வாய்ந்த மனநோய் மருத்துவர் சாரதாமேனனின் வீட்டுக்காரர்தான் அவர். அவரிடம் ``இவர் ஒரு எழுத்தாளர். இவருடைய வீசா முடிவடைந்துவிட்டது. கொஞ்சம் நீங்கள் உதவி செய்ய வேண்டும்'' என்று உதவி கேட்க ``சரி, வரச் சொல்'' என்றார். நானும் சிவராமுவும் போனோம். அவரிடம் பாஸ்போர்ட்டை கொடுத்தேன் வாங்கிப் பார்த்தவர் ``என்னங்க `வீசா' காலம் முடிவடைந்து எட்டு மாதம் ஆகப் போகிறது இப்போது வருகிறீர்களே. சட்டப்படி இது குற்றம்'' என்று கத்த ஆரம்பித்துவிட்டார். சரி என்று வெளியில் வந்ததும் சிவராமுவை நான் திட்டிவிட்டேன். உடனே சிவராமு என்ன செய்தான் தெரியுமா? சிவராமு அந்த விஷயத்தில் ரொம்ப தைரியசாலி. பாஸ்போர்ட்டை கிழித்து எறிந்துவிட்டான். இந்தப் பிரச்னையினால்தான் என் மீது கோபம் அவனுக்கு.அன்றைக்கு எல்லாம் தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருந்த காலம். சிலோன்காரர்கள் இங்கே வந்தவுடன் என்ன செய்வார்கள் என்றால் தாலுக்கா ஆபீஸ் போய் பர்மிட் வாங்கிக் கொள்வார்கள். பர்மிட் வாங்கிக் கொண்டு மதுபாட்டில் விற்பார்கள். வாழ்க்கைக்குத் தேவையான வருமானம் அவர்களுக்கு இதிலிருந்துதான் கிடைக்கும். ஏதோ யூனிட் அளவு கணக்கில் கொடுப்பார்கள். சிதம்பரம் தாலுக்கா ஆபீஸில் மாதா மாதம் இவனுடைய பாஸ்போர்ட்டை காண்பித்து காண்பித்து சரக்கு வாங்கி விற்பான். தாலுக்கா ஆபீஸில் தங்கி இருக்கின்ற முகவரி கேட்டபோது மௌனியின் அட்ரஸை கொடுத்து இருக்கிறான். மௌனியைத் தேடி போலீஸ்காரன் வந்திருக்கிறான். மௌனி குடிப்பார் ஆனால் இந்த அளவுக்குக் குடிக்கமாட்டாரே என்று சந்தேகப்பட்டு வந்திருக்கிறான். மௌனி சிவராமுவைக் கூப்பிட்டு கேட்டு இருக்கிறார். எந்த அட்ரஸைக் கொடுத்த என்றதற்கு `உன்னுடைய அட்ரஸைத்தான் கொடுத்திருக்கிறேன்' என்று சொல்லி இருக்கிறான். உடனே `வெளியே போடா' என்று சொல்லிவிட்டார். மௌனி ஊரில் பெரிய மனிதர். அரிசி மில் எல்லாம் வைத்திருக்கிறார். அவருடைய பெயர் கெடுவதை அவர் விரும்பவில்லை. அவரும் குடிக்கக் கூடியவர்தான். அவருடைய மூன்றாவது பையன் பெரிய இன்ஜினீயர். கல்யாணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை. எலக்ட்ரிக் ஷாக் விபத்தில் செத்துப் போய்விட்டான். அந்த துக்கத்தில்தான் குடிக்க ஆரம்பித்திருக்கிறார். தர்மு சிவராமுவின் மனநிலை எப்படித் தெரியுமா? யார் அவனுக்கு அதிகமாக உதவி செய்திருக்கிறார்களோ அவரைத்தான் அவன் திட்டுவான். இலங்கையில் இருந்த அவனுடைய வீட்டை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றான் என்று வைத்துக் கொண்டால் இந்திய ரூபாயில் ஐயாயிரம் ரூபாய்தான் அவனுக்கு கையில் கிடைத்தது. அதில் பெரிய இழப்பு அவனுக்கு. ஆனால் அவன் அதற்காக கவலையேபடவில்லை. சிவராமு இந்தியா வந்ததே கனடா போவதற்காகத்தான்.
தீராநதி: பாரிஸ் போவதற்குத்தானே அவர் இங்கு வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்!
கி.அ. சச்சிதானந்தம் : இல்லை. கனடா போவதற்காகத்தான் இந்தியாவிற்கு வந்தான். அதற்குப் பிறகு பாரிஸ் போவதற்காக பிரெஞ்ச் படித்தான். பிறகு விட்டுவிட்டான். இங்கிலீஷ் நாவல் ஒன்றை எழுதி கனடாவுக்கு அனுப்பினான். ஆனால் அது எதுவும் வேலைக்கு உதவவில்லை.
தீராநதி : பிரமிள் உங்களைப் பற்றி விமர்சித்து நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறாரே? உங்களுக்கும் அவருக்கும் எதன் பொருட்டு தர்க்கம் நடந்தது?கி.அ. சச்சிதானந்தம் : அடிப்படையில் நான் ஓர் ஊர் சுற்றி. பிரமிள் ஊர் சுற்றுவதையே விரும்பாதவன். ரூமுக்குள்ளேயே அடைஞ்சிகிடப்பான். நான் 1974 வாக்கில் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் நேபாளுக்கு சென்று ஆறு மாதம் தங்கி இருந்தேன். மௌண்ட், எவரெஸ்ட் என்று சுற்றினேன். அப்படிப் போய்விட்டு வந்ததும் அவனிடம் ``எவரெஸ்ட் மலைக்கு முதன் முதலில் தமிழ்நாட்டிலிருந்து நான்தான் போயி இருக்கிறேன்'' என்றேன். அதற்கு அவன் ``இதுவெல்லாம் ஒரு சாதனையா?'' என்று கேலி பேசினான். நீங்கள் சொல்வதைப் போல நிறைய கவிதைகளில் என்னைத் திட்டி எழுதியிருக்கிறான். பலமுறை என்னிடம் பணம் கேட்டிருக்கிறான். `வேலை செய்து பணம் சம்பாதி' என்று சொன்னேன். அவனிடம் ``உன்னுடைய உரைநடைதான் நன்றாக இருக்கிறது. உன் கவிதைகள் எனக்கு பிடிக்கவில்லை'' என்று சொன்னேன். அதேபோல விமர்சனத்தையும் நிறுத்திக் கொள் என்றேன். அவன் நிறைய பொய் சொல்வான். அதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சங்கரலிங்கம் என்று ஒருத்தன் இருந்தான். இலங்கை அகதி அவன். சிவராமு தன்னைத்தானே பேட்டி எடுத்துக் கொண்டு சங்கரலிங்கம் பேட்டிக் கண்டதைப் போல ஒரு பத்திரிகையில் போட்டுவிட்டான். சங்கரலிங்கத்தை உண்மை தெரியாமல் ``யாரோ ஒருவனைத் திட்டுவதற்கு நீ எதுக்கடா அவனை போய் பேட்டி எடுத்தே'' என்று கேட்டேன். அவன் என்ன செய்தான் ``நான் செய்யுல சார்... அவனே கேள்வி எழுதி நான் பேட்டி எடுத்த மாதிரி எழுதிட்டான்'' என்று சொன்னான். நான் தர்முசிவராமுகிட்ட ``என்னடா பெரிய தார்மீகம், ஜே.கிருஷ்ணமூர்த்தி, தத்துவம் என்றெல்லாம் சொல்றீயே இப்படிச் செய்யலாமா?'' என்றேன். உடனே என் மீது அவனுக்கு கோபம் வந்துவிட்டது. அதேபோல சிவராமு இறப்பதற்கு முன்னால் என்னை விமர்சித்து ஏதேதோ எழுதி வெளியிட்டான். என்னுடைய `பீக்காக்' பதிப்பகத்தை `பீ'காக் என்று எழுதினான். அதை `லயம்' சுப்ரமணியன் வெளியிட்டார். உடனே நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டேன். பிறகு சுப்ரமணியன் மன்னிப்புக் கேட்டதால் பிரச்சனையை பெரிதாக்காமல் விட்டுவிட்டேன்.இன்னொரு முக்கியமான காரணம் என்னவென்றால், தர்முசிவராமு வை.கோவிந்தனிடம் போக ஆரம்பித்தான். அவரிடம் என்னைப் பற்றியும் ந.முத்துசாமி பற்றியும் நிறைய குறை சொல்லி இருக்கிறான். அவருக்கு கோபம் வந்துவிட்டது. உடனே அவர் சிவராமுவிடம் ``சச்சிதானந்தம் ஒரு மனுஷன். முத்துசாமியும் ஒரு நல்ல எழுத்தாளர். இருவரும் என் நண்பர்கள். இவர்கள் இருவரையும் பற்றி என்னிடம் குறை சொல்வதாக இருந்தால் என் இடத்திற்கு இனிமேல் வராதே!'' என்று கத்திக் கொண்டிருக்க, அந்தச் சமயத்தில் நான் எதேச்சையாக அங்கு சென்றுவிட சிவராமுவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. உடனே சரசரவென்று இறங்கிவிட்டான். நான் இந்த இடத்தில் என்ன செய்ய முடியும்? அப்படித்தான் ஒருநாள் முத்துசாமி வீட்டில் நான், முத்துசாமி, அவர் மனைவி எல்லோரும் இருக்கின்றபோது முத்துசாமியைப் பார்த்து சிவராமு ``நீங்கள் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர். சிறுகதையில் நீங்கள் பெரிய இடத்திற்குப் போகவிடாமல் உங்களை குடும்பம்தான் நாசம் பண்ணுகிறது. (ஒரு நல்ல எழுத்தாளனுக்கு குடும்பமே இருக்கக் கூடாது என்பது சிவராமுவின் தியரி)'' என்று சொல்லிவிட்டான். முத்துசாமிக்கு நடந்திருப்பதோ காதல் கல்யாணம். கணவன் மனைவிக்குள் நல்ல ஒற்றுமை. உடனே முத்துசாமியின் மனைவி இவனை வீட்டிற்கு வரக் கூடாது என்று சொல்லிவிட்டார். இதனால் இருவருக்குள் பெரிய சண்டை.இந்தச் சமயத்தில்தான் எங்களிடமிருந்து பிரிந்து போய் பெசண்ட் நகரில் குடி இருந்தான். அந்தச் சமயத்தில் அவனுக்கு நரோ ஜெயராமன்தான் நிறைய உதவி செய்தார். நானும் அடிக்கடி போய் பார்ப்பேன். பண உதவிகள் செய்தேன்.
தீராநதி : நீங்கள் எதற்காக `பீக்காக்' என்று தனியாக பதிப்பகம் தொடங்கினீர்கள்?
கி.அ. சச்சிதானந்தம் : `எழுத்து' நின்று போய்விட்டது. அப்போது செல்லப்பாவிடம் ``சார்... நீங்கள் எழுதிக் கொடுங்கள், நான் செலவு செய்து கொண்டு வருகிறேன்'' என்றேன். அப்போது செல்லப்பா வீட்டில் பெரிய வறுமை. தனக்குக் கிடைத்த சுதந்திரப் போராட்ட தியாகி உதவித் தொகையைக் கூட அப்போது அவர் வாங்கமாட்டேன் என்று மூன்று வருடங்கள் உதாசீனப்படுத்திக் கொண்டிருந்தார். அப்புறம் நடையாக நடந்து நான் சில உதவிகள் செய்து உதவித் தொகையை வாங்கித் தந்தேன். அப்போதுதான் க.நா.சு. ``செல்லப்பா தியாகி உதவித் தொகையை வாங்கிக் கொண்டு இப்போது ரொம்ப சௌகர்யமாக இருக்கிறார்'' என்று எழுதிவிட்டார். அதனால் பெரிய வாக்குவாதம் வந்தது.செல்லப்பா எழுதுவது எப்படியோ அச்சாகிவிட்டால் பிற்காலத்தில் எப்படியும் காப்பாற்றப்பட்டுவிடும் என்பதால் நான் அவரை வற்புறுத்தி எழுதுங்கள் என்றேன். உடனே ``தமிழ் சிறுகதை பிறக்கிறது ஏற்கெனவே வெளிவந்தது இருக்கிறது. அதைச் சில திருத்தங்கள் செய்து மாற்றித் தருகிறேன், நீங்கள் போடுங்கள்'' என்றார். சி.மோகன் `க்ரியா'விடம் கருத்துவேறுபாடாகி தனியாகச் சென்று `மிதிலா அச்சகம்' என்று ஒன்றை ஆரம்பித்தார். என் வீட்டு மாடியில்தான் `க்ரியா' பதிப்பகம் அப்போது இருந்தது. அதன் மூலம் எனக்கு சி.மோகனை ஏற்கெனவே தெரியும். அவரிடம் சென்று கேட்டேன். அவர் ``பேப்பர் செலவுக்கு மட்டும் முதலில் பணம் தந்துவிடுங்கள், அச்சுச் செலவை வேண்டுமென்றால் பிறகு வாங்கிக் கொள்கிறேன்'' என்றார். அப்படி உருவானதுதான் `பீக்காக்' பதிப்பகம்.
தீராநதி : ஆனந்தகுமாரசாமி பற்றிய ஆய்வாளர்களில் அல்லது அவரின் பங்களிப்பைப் பற்றிய தகவல்களைப் பேசுபவர்களில் இந்திய அளவில் நீங்கள் குறிப்பிடப்படும்படியான நபராக இருக்கிறீர்கள். அவரின் பங்களிப்பைப் பற்றிப் பேசுங்களேன்?
கி.அ. சச்சிதானந்தம் : முதன் முதலில் ஆனந்தகுமாரசாமியை நான் படிக்க ஆரம்பித்ததே நான் ஊர் சுற்றத் தொடங்கிய போதுதான். இந்திய அளவில் முக்கியமான ஸ்தலங்களுக்குச் செல்லும்போது, அந்த இடங்களை வெறுமனே பார்த்துத் திரும்பாமல் அவற்றை பற்றி உணர்வுபூர்வமான கருத்துபூர்வமான தகவல்களையும் தெரிந்துகெண்டால் இன்னும் ரசிக்கலாம் என்று ஒருவர் சொல்ல, அதற்காக படித்தேன். துரைராஜசிங்கம் என்பவர் ஆனந்தகுமாரசாமியின் நூற்றாண்டுவிழாவையொட்டி ஒரு மலர் வெளியிட அதற்கான விமர்சனம் `ஹிண்டு'வில் வெளியாகி இருந்தது. அதை நான் படித்தேன். அதில் வெளியாகி இருந்த கோலாலம்பூர் முகவரிக்கு ``இந்தப் புஸ்தகத்தை நீங்கள் அனுப்பித் தந்தால் நான் பணம் அனுப்புகிறேன். இல்லையென்றால், எங்கு கிடைக்கும் என்று தகவல் தந்தால் வாங்கிக் கொள்கிறேன்'' என்று ஒரு கடிதம் எழுதினேன்.அப்போது ரிசர்வ் பாங்கின் ஏகப்பட்ட கெடுபிடி. வெளிநாட்டு பண மாற்றம் என்பது சுலபமானதல்ல; அந்த முகவரியிலிருந்து ``முதலில் பணத்தை அனுப்புங்கள். பிறகு புஸ்தகத்தை அனுப்புகிறேன். ஏனென்றால் இந்தப் புஸ்தக விஷயத்தில் பல அனுபவங்களை நான் இந்தியர்களிடமிருந்து பெற்றிருக்கிறேன்'' என்று ஒரு பதில் கடிதம் வந்தது. துரைராஜசிங்கம் என்பவர் ஆனந்தகுமாரசாமியின் பெரிய பற்றாளர். ஆனந்த குமாரசாமியின் எல்லா புஸ்தகத்தையும் அவர் சேகரித்து வைத்திருந்தார். அப்போது நான் திருமணமாகாதவன். 700 ரூபாய் இருந்தால் வாங்கிவிடலாம் என்றதும் உடனே பணம் அனுப்பி வைக்க, புஸ்தகம் வந்து சேர்ந்தது. அன்றிலிருந்து துரை ராஜசிங்கம் நிறைய கடிதங்களைத் தொடர்ந்து எனக்கு எழுத ஆரம்பித்துவிட்டார். ஆனந்த குமாரசாமியின் புஸ்தகங்களை படித்துப் பார்த்ததும் பிடித்துப்போய்விட்டது. உடனே அப்போது இருந்துதான் நான் ஆனந்தகுமாரசாமியின் நூல்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். கோவிந்தன் இருக்கிறார் இல்லையா அவர் ஒரு பகுத்தறிவுவாதி. எம்.என். ராயின் குழுவைச் சேர்ந்தவர். அவருக்கு ஆன்மிகம் என்பதெல்லாம் பிடிக்காது. `ஹிஸ்டரி ஆஃப் த இண்டியன் ஆர்ட்' என்ற ஆனந்தகுமாரசாமியின் புஸ்தகத்தை அவருக்கு படிக்கக் கொடுத்தேன். படித்துப் பார்த்த அவர் ``அடடே பெரிய ஆளுய்யா இவன்'' என்று அவரும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தார்.ஆனந்த குமாரசாமியின் பெரிய பங்களிப்பு எதுவென்றால், இந்தியாவின் கலை மரபுகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அவரைத் தவிர வேறு ஆட்கள் யாரும் நம்மிடம் இல்லை. அவரை விட்டுவிட்டு இந்தக் கலைகளை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. எப்படி மேற்கத்திய நாடுகள் கிழக்கத்திய நாடுகளை அழித்திருக்கிறது. கிழக்கத்திய நாடுகள் மேற்கத்திய கலாச்சாரத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்ளக்கூடாது. நமக்கென்று சில மதிப்புகள் இருக்கிறது என்று பிரிட்டீஷ்காரர்களை நோக்கி தன் எழுத்துக்களால் விமர்சித்தார் ஆனந்த குமாரசாமி.`இவன் யாருடா நம்மை விமர்சிக்கிறது?' என்று வெள்ளையர்கள் திரும்பிப் பார்க்கத் தொடங்கினார்கள். ஆனந்த குமாரசாமியின் அம்மா ஆங்கிலேயர். அப்பா தமிழர். இரண்டு வயசு வரைதான் இலங்கையில் இருந்திருக்கிறார். மீதி காலம் முழுக்க லண்டனில் வாழ்ந்தவர். ஆக, இவர் சொல்வதில் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று ஆங்கிலேயர்கள் கவனிக்க ஆரம்பித்தார்கள். ஆனந்த குமாரசாமியின் மொழி இருக்கிறதே அது அசல் ஆங்கிலேயனின் மொழி. நாம் எவ்வளவு வேண்டுமென்றாலும் ஆங்கிலத்தில் எழுதலாம், ஆங்கிலேயனின் மொழி நடை என்று ஒன்று இருக்கும் இல்லையா? ஆனந்த குமாரசாமியின் அந்த நடைதான் எல்லா ஆங்கிலேயரையும் இந்திய கலைகள் பக்கம் திருப்பியது.மேலை நாடுகளில் கலை என்றால் அது கலைக்காக மட்டும்தான். ஆனால் இந்தியாவில் கலை என்றால் வெறும் கலைக்காக அல்ல அது. கலைநயம் மிக்க ஒரு பொருள் பயன்பாட்டிற்கான ஒரு பொருளாகவும் இங்கே இருக்கும். ஆக, இந்த வித்தியாசத்தை விளக்கினார். ஆனந்த குமாரசாமியின் முதல் கட்ட எழுத்துக்கள் எல்லாம் வெறும் தகவல்களாகவே இருக்கும். இரண்டாம் கட்ட எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் விளக்க உரையோடு கூடிய தகவல்களாக இருக்கும். `டான்ஸ் ஆஃப் சிவா'வை எடுத்துக் கொண்டால் வெறும் தகவல்மட்டும்தான் இருக்கும். மூன்றாவது காலகட்டத்தில் அவருக்கு வயதாகி எழுதும்போது ஆன்மிகத் தன்மையோடு வெளிப்பட்டிருக்கும். இந்தக் காலகட்டத்தில் தத்துவத்தில் ஈஸ்ட் வெஸ்ட் என்றெல்லாம் தனித்தனியாக கிடையாது. அந்தக் காலத்தில் `கிழக்கு கிழக்குதான், மேற்கு மேற்குதான். இரண்டும் சேரவே முடியாது' என்ற, நோபல் பரிசு வாங்கிய ஆங்கில எழுத்தாளர் கிப்லிங் கோட்பாட்டை முதலில் உடைத்தவர் ஆனந்த குமாரசாமிதான். இம்பிரியலிஸம் கோலோச்சிய காலத்தில் உடைத்தார். ``நாகரிகமற்ற உலகத்தை நாங்கள் நாகரிகப்படுத்த போகிறோம்'' என்றுதான் அன்றைக்கு இங்கிலீஷ்காரன் வாதிட்டான். இதையெல்லாம் உடைக்கிறார் குமாரசாமி. உலகத்தில் உள்ள பெரிய பெரிய தத்துவவாதிகளின் சிந்தனைகள் எல்லாம் அனுபூதி மட்டத்தில் எல்லாம் ஒன்றே என்ற கருத்திற்கு வந்து சேர்கிறார். இதைச் சொல்வதற்கு ஆனந்த குமாரசாமிக்கு எல்லா தகுதிகளும் உண்டு. செவ்வியல் மொழி என்று சொல்லப்படுகின்ற மொழிகளான தமிழ் அவருக்குத் தெரியும். சமஸ்கிருதம் தெரியும். ஹீப்ரு தெரியும், லத்தின் தெரியும். கிரீக் தெரியும். ஆக, செவ்வியல் இலக்கியங்கள் தத்துவம் என்று சொல்லப்படுகின்ற புஸ்தகங்களையெல்லாம் மூல மொழியிலேயே படித்தவர் அவர்.
தீராநதி : ஆனந்த குமாரசாமியின் தந்தைதானே முத்துக்குமாரசாமி. அவர் இலங்கையில் பெரிய செல்வந்தர் இல்லையா?
கி.அ. சச்சிதானந்தம் : யாழ்ப்பாணத்தில் மிகப் பெரிய பணக்கார தமிழ் சமுதாயத்தில் பிறந்தவர் முத்துக்குமாரசாமி. அந்த தமிழ் சமுதாயம் நல்ல நல்ல காரியங்களை எல்லாம் செய்திருக்கிறது. சிலோன் அரசாங்கத்தில் இவர் ஒரு அங்கத்தினர். சிங்களரை எல்லாம் நீங்கள் மட்டமாக கருதுகிறீர்கள் அவர்களின் கலாச்சாரம் அவ்வளவு தரம் குறைந்ததல்ல என்று இங்கிலாந்தில் முதன்முதலாக இவர்தான் எடுத்துப் பேசுகிறார். அதைப் பேசிவிட்டு சிலோன் திரும்பிய முத்துக்குமாரசாமியை பெரிய தேரில் உட்கார வைத்து சிங்களர்கள் கொழும்பில் ஊர்வலமாக அழைத்துக்கொண்டு போனார்கள்.அந்தச் சமயத்தில் சிங்களர் - தமிழர் பாகுபாடெல்லாம் அங்கு உருவாகவில்லை. தர்மு சிவராமு சொல்லுவான் பண்டார நாயக்கா காலத்திற்கு முன்புவரை சிங்களப் பெண்கள் எல்லாம் மிக மிக அறியாமைவாதிகளாம். தமிழர்களின் நிலப்பரப்பு ரீதியிலான பிரச்சனை என்னவென்றால், அவர்கள் வசித்துக் கொண்டிருந்த பகுதியெல்லாம் நீர் ஆதாரம் இல்லாமல் வறண்ட பூமியாக இருந்திருக்கிறது. தென் இலங்கை அப்போது வளராமல் கிடந்திருக்கிறது. நிலவளம் இல்லாததால் தமிழர்கள் எல்லாம் நன்றாக படித்துவிட்டு பிரிட்டீஷ் ஆட்சியில் அரசு வேலைக்குப் போய்விட்டார்கள். பிரிட்டீஷ் காலத்தில் 90 சதவீதம் அரசு ஊழியர்கள் தமிழர்கள்தான் இருந்திருக்கிறார்கள். அதனால் சிங்களரை அவன் (பிரிட்டீஷ்) பொருட்படுத்தவே இல்லை.தாய்வழி சமூகத்தில் அன்று சிங்களர்கள் யாரும் யாருடனும் வாழலாம் என்ற நிலை இருந்திருக்கிறது. திருமணமாகாத சிங்களப் பெண்ணுக்கு குழந்தை பிறந்து பள்ளியில் படிக்கச் சென்றால் தகப்பனின் பெயர் கேட்பான். இவளுக்கு தகப்பனின் பெயர் தெரியாது. அதனால் யாரோ சாமிநாதப்பிள்ளை என்ற ஒருவருடைய பெயரையே பதிய வைத்திருக்கிறார்கள். இப்படியே நூறு பெயர்களுக்கு தகப்பன் சாமிநாதப் பிள்ளை என்று பதிய வைத்திருக்கிறார்கள். உடனே பிரிட்டீஷ்காரனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. என்னடா இது 100 பேருக்கு சாமிநாதப் பிள்ளைதான் தகப்பனா என்று விசாரித்துப் பார்த்தால் அந்த சாமிநாதப்பிள்ளை என்பவன் கிழவனாக இருக்கிறான். அவனிடம் அதிகாரி ஒரு சிங்களப் பெண்ணின் பெயரைச் சொல்லி `அந்தக் குழந்தைக்கு நீதான் தகப்பனா?' என்று கேட்டால் ஆமாம் என்றிருக்கிறான். அதிகாரிக்கு ஒரே குழப்பம். தொடர்ந்து விசாரித்ததில் ``பதிவு இல்லாமல் இருந்து போனால் அரசாங்கத்தில் சலுகை பெறமுடியாது. இந்தப் பெண் பிள்ளைகளைக் கெடுத்து ஏமாற்றிவிட்டு போய்விட்டார்கள் பாவம். அதான் என்னோட பெயரைக் கொடுத்தேன்'' என்று சொல்லி இருக்கிறான். இப்படிப்பட்ட பின்னணியில்தான் முத்துக்குமாரசாமி அம்மக்களுக்காக வாதாடி இருக்கிறார்'' என்று சிவராமு விளக்கினான். சிங்கள இன மக்களில் இருந்த பணக்காரர்கள் எல்லாம் அன்றைக்கு வெளிநாட்டில் இருந்தார்கள். சிலோனையே அவர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால் சிங்களன் என்று தன்னைச் சொல்லிக் கொள்வார்கள்.ஆசியக் கண்டத்திலேயே முதல் பாரிஸ்டர் பட்டம் பெற்றவர் முத்துக்குமாரசாமிதான். `டிஸ்ரேலி' என்று ஒரு பிரதமர் இருந்தார். அவர் முத்துக்குமாரசாமியின் நண்பர். அவர் ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அந்த நாவலில் வரும் கதாபாத்திரம் முத்துக்குமாரசாமியைக் குறிப்பதைப் போலவே இருக்கும். அதை நான் ஜெராக்ஸ் எடுத்து இன்றும் வைத்தி ருக்கிறேன். முத்துக்குமாரசாமி எலிசபெத் பீபி என்ற இங்கிலீஷ்காரியை கல்யாணம் பண்ணிக்கொண்டார். எலிசபெத் பீபி மிகப்பெரிய பணக்கார குடும்பம். அந்தக் குடும்பம் ஏற்கெனவே இந்தியாவில் வியாபாரம் செய்தவர்கள். அந்தப் பழக்கத்தில்தான் இருவருக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணமாகி இரண்டு வருடத்திற்குப் பிறகு அதாவது 1877-ல் ஆனந்த குமாரசாமி பிறந்தார். குழந்தை பிறந்த கையோடு எலிசபெத் பீபி இங்கிலாந்திற்குச் சென்றுவிட்டார்.அவர் போன ஒரு வருடத்தில் முத்துக்குமாரசாமி இறந்துவிட்டார். இந்தத் தகவல் தெரிந்ததும் அந்த அம்மா சிலோன் திரும்பவே இல்லை. ஆனந்த குமாரசாமி இங்கிலாந்திலேயே வளர்ந்து தன்னுடைய 24 வயதில்தான் இந்தியாவிற்கே வருகிறார். இந்தியாவிற்கு வந்து கனிமங்களைப் பற்றி ஆய்வு செய்கிறார். அவர் ஒரு கனிமவியல் அறிஞர். இந்தியக் கலைகளின் மீது ஆர்வம் வர, பிறகு இந்த வேலையை விட்டுவிட்டார்.

No comments: